ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார் முதல்வர் ஹேமந்த் சோரன். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 48 எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் பாஜகவினரும் அதன் கூட்டணிக் கட்சியான ஏஜெஎஸ்யு கட்சியினரும், இரண்டு சுயேச்சை வேட்பாளர் இருவரும் சேர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடந்து முடியும் தருவாயில் பாஜகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
குதிரை பேரம் செய்யும் பாஜக: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன், பாஜக மீது சரமாரி குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணப்பெட்டியுடன் சிலர் சுற்றிவந்தனர். அவர்களை விலைக்கு வாங்கும் பொறுப்பு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாஜக தேர்தல் வெற்றிகளுக்காக ஆங்காங்கே குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை நிகழ்த்தி உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல்களை உருவாக்குகிறது. எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிதைத்துவிட்டனர். எப்போதும் எங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
சர்ச்சையின் பின்னணி: 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். 2021 மே மாதம் ராஞ்சியின் அன்காரா வட்டத்தில் 0.88 ஏக்கர் பரப்பிலான குவாரி, முதல்வருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பதவியை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக கல்குவாரி உரிமத்தை அவர் பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும், முதல்வரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மாநில ஆளுநர் ரமேஷ் பெய்ஸிடம் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.