ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. அவருக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியுள்ளது. இந்த ஒரு நாள் சிறப்பு அமர்வில், முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்யவிருந்தார். சத்தீஸ்கரில் இருந்து காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ராஞ்சி விதான் சபாவின் ஒரு நாள் சிறப்பு அமர்வில் கலந்து கொள்ள திரும்பினர். எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர முயற்சிகளை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது “பாஜக தலைமையில் ஆட்சிகள் இல்லாத மாநிலங்களில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் சோரன் பேசியதாவது,

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா ஜார்கண்ட் எம்எல்ஏக்களை “குதிரை பேரம்” செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

“பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அஸ்ஸாம் முதல்வர் ஜார்க்கண்ட் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினார். ஆளும் அரசின் எம்எல்ஏக்களை மிரட்டி, பண ஆசையைக் காட்டி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார். 

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கலவரத்தைத் தூண்டி நாட்டில் உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக சோரன் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியான பா.ஜ.க., “ஆளும் அரசின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் முயற்சியை பாஜக செய்து வருகிறது என்றார். 

அப்போது, ​​எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பீடம் அருகே வந்து முழக்கங்களை எழுப்பினர்.

ஜார்க்கண்டில் யாருக்கு பெரும்பான்மை? 

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 41 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு 49 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. 

முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் – 30  
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் – 18
ராஷ்ட்ரிய ஜனதா தளம் – 1
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 1 
தேசியவாத காங்கிரஸ் கட்சி – 1
பாரதிய ஜனதா கட்சி -25
ஜார்கண்ட் மாணவர் சங்கம் – 2 
சுயேச்சை -2

தகுதி நீக்கம் செய்யப்படுவாரா முதல்வர் ஹேமந்த் சோரன்?

முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் (EC) ஆகஸ்ட் 25 அன்று தனது முடிவை ஆளுநர் ரமேஷ் பாய்ஸுக்கு அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், முதல்வரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.