அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி பணிகளில் 800 கோடி ரூ ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி மேலும் ஒரு வழக்கு வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையின் போது எஸ்.பி.வேலுமணி சார்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிஸ்டர் ஜெனரல் எஸ்.பி.ராஜு ஆஜரானார்.
இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்தார். ஒன்றிய அரசின் நீதிபதி எவ்வாறு ஊழல் வழக்கில் ஆஜராக முடியும். வேலுமணி வழக்கில் ஆஜராக எஸ்.பி.ராஜுவுக்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்று கூறினார்.
வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் வடவள்ளி சந்திரசேகரிடம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சமீபத்தில் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது.