பழநி கோயிலில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி: விடுமுறை தினம் காரணமாக பழநி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 வார விடுமுறை தினம் காரணமாக பழநி கோயிலில் நேற்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. பக்தர்கள் வந்த வாகனம் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர்.

அதிக கூட்டம் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனத்திற்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மலைக்கோயில் அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். மலைக்கோயில் மற்றும் அடிவார பகுதியில் பக்தர்கள் மழை மற்றும் வெயிலில் வாடுவதைத் தவிர்க்கும் வகையில் பெரும்பாலான இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.