இரண்டு நாள் பயணமாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமித் ஷா, “சிவசேனா பாஜக-வுக்கு துரோகம் செய்துவிட்டது. எனவே உத்தவ் தாக்கரேவுக்கு பாடம் புகட்டுவது அவசியம். அரசியலில் எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வோம். ஆனால் துரோகத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம். சிவசேனா உடைந்ததற்கும், அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளுக்கும் உத்தவ் தாக்கரே தான் காரணம். உத்தவ் தாக்கரேயின் பேராசைதான் கட்சியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராக திரும்ப காரணமாகும்.
சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது மற்றும் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்ததில் பாஜக-வுக்கு எந்த பங்கும் கிடையாது. உத்தவ் தாக்கரே பாஜக-வுக்கு மட்டுமல்லாது, அவரின் கொள்கைக்கும் துரோகம் செய்துவிட்டார்.
அதோடு வாக்களித்த மகாராஷ்டிரா மக்களையும் உத்தவ் தாக்கரே அவமதித்துவிட்டார். உத்தவ் தாக்கரேயின் அதிகார பேராசை காரணமாகத்தான் அவரின் கட்சி இன்றைக்கு இந்த அளவுக்கு உடைந்திருக்கிறது. சிவசேனாவின் இந்த நிலைக்கு பாஜக காரணமல்ல. உத்தவ் தாக்கரேயிக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் வெளிப்படையாக அரசியல் செய்யக்கூடியவர்கள். மூடிய அறைக்குள் அரசியல் செய்யமாட்டோம். அரசியலில் மோசடி செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பாஜக-வும், உண்மையான சிவசேனாவும் இணைந்து மும்பை மாநகராட்சி தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படவேண்டும். மக்கள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் இருக்கின்றனர். கொள்கைக்கு துரோகம் செய்த உத்தவ் தாக்கரே கட்சியுடன் மக்கள் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக மும்பை மாநகராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மும்பை மாநகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனாதான் ஆட்சி செய்து வருகிறது. சிவசேனாவும், பாஜகவும் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கூட்டாக சேர்ந்தே சந்தித்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதால் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது குறிப்பிடத்தக்கது.