புதுடில்லி : உக்ரைனில் நடந்து வரும் போரால், நம் நாட்டில் ரயில் தொழிற்சாலைகளின் தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்வேக்கு தேவையான ரயில் இன்ஜின்கள், பெட்டிகள், சக்கரங்கள் உள்ளிட்டவை பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
நடப்பு நிதியாண்டில் இந்த தொழிற்சாலைகளின் தயாரிப்பு திறன் குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது.ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வி.கே.திரிபாதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ரயில்வே பொது மேலாளர்கள், ரயில் தொழிற்சாலைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், ஜூலை 25ம் தேதி வரையிலான முதல் நான்கு மாதங்களில் நடந்த தயாரிப்பு குறித்து ஆராய்ந்ததில், பெரும்பாலான பொருட்களின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், உக்ரைனில் இருந்து வர வேண்டிய சக்கரங்கள், மின்னணு சாதனங்கள் நிறுத்தப்பட்டன. குறிப்பாக சக்கரங்கள் ஏற்றிய கப்பல், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளது. இதனால், நம் நாட்டில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டதற்கான காரணமாக கூறப்படுகிறது.புறநகர் ரயில்களுக்கான பெட்டிகள், 730 தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில், 53 மட்டுமே தயாரிக்கப்பட்டு உள்ளன. நீண்ட தொலைவு இயக்கக் கூடிய ரயில்களுக்கான பெட்டிகளின் தயாரிப்பும் கடுமையாக குறைந்துள்ளது. இவ்வாறு அனைத்து பொருட்களின் தயாரிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. வரும் மாதங்களில் இந்த குறைவை ஈடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement