குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே உள்ளது வெள்ளமோடி. இங்கு மெயின்ரோட்டில் ஊய்க்காட்டு சிவசுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் பகுதியில் மாசானசுவாமி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இன்று காலை மண்டபம் இடிக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் அங்கு திரண்டனர். கோயிலை இடித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் அங்கு அடையாளம் தெரியாத லாரி ரிவர்ஸில் திரும்பும்போது எதிர்ப்பாராமல் கோயிலில் மோதியதில் இடிந்தது என்பது தெரிய வந்தது.
இதனால் ஊர்மக்கள் மறியலை கைவிட்டனர். இது குறித்து ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடித்துவிட்டு சென்ற லாரியை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வெள்ளமோடியில் அடையாளம் தெரியாத வாகனத்தால் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.