அரிஸ்டாட்டில், அம்பேத்கரை மேற்கோள்காட்டி ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறிய சீமான்

அவர் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், “ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் அரசனாக மாற்றிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன் மாணவனுக்கு அளித்த ஆசிரியர் அம்பேத்கரைப்போல, உலகத்தின் மகத்தான மனிதர்களை உருவாக்கும் உலைக்களங்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் குழந்தையை உலகுக்கேக் காட்டுகிறார்கள். அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.

எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில் , எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கி தந்த என் ஆசிரியர் பேரா.தொ.பரமசிவன் தொடங்கி கல்வியையும், உலகத்தையும் கற்றுக் கொடுத்த எனது எல்லா ஆசிரியர்களையும் ஆழ் மன நன்றியோடும் , பெருக்கெடுக்கும் மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன். நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆசிரியரையும் இந்த ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.