மெல்ல தேயும் காங்கிரஸ்:
தமிழகத்தில் திமுக Vs அதிமுக என எப்படி இருதுருவ அரசியல் இருந்து வருகிறதோ இதேபோன்று தேசிய அரசியல் இதுநாள்வரை பாஜக Vs காங்கிரஸ் என இருந்து வந்தது. வாஜ்பாய் காலந்தொட்டு இருந்து வந்த இந்த இருதுருவ அரசியலில், 2014 இல் மோடியும், அமித் ஷாவும் ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தபோது, பாஜகவின் கை மெல்ல மெல்ல ஓங்க தொடங்கியது.
கடந்த எட்டு ஆண்டுகளில் மத்தியிலும், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சி செய்யும் அளவுக்கு பாஜக விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளது. மாறாக கிட்டத்தட்ட 200 ஆண்டுகள பழைமையான காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல தேய்ந்து இன்று ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் என்று இரண்டே மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சியில் உள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் அக்கட்சியின் எம்பிக்கள் எண்ணிக்கை வெறும் 52 தான்.
காரணம்:
காங்கிரசின் இந்த தொடர் வீழ்ச்சிக்கு, அக்கட்சியோ, அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சிபுரியம் மாநிலங்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ற பேரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிவரும் பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைதான் காரணமென காங்கிரஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆபரேஷன் லோட்டஸ் எனும் பாஜகவின் தந்திர அரசியல் ஒருபுறமிருக்க, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாட்டின் விளைவாக கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி உற்சாகம்:
இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பாரதமே ஒன்றிணைவோம் எனும் பேரில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். அவரது இந்த நடைபயணம், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வீறுநடை போட உதவுமா என்றெல்லாம் அறுதியிட்டு கூற முடியாத நிலையில், காங்கிரஸ் இல்லை என்றால் என்ன? பாஜகவுக்கு டஃப் கொடுக்க இதோ நாங்கள் இருக்கிறோம் என்று 2024 தேர்தலை கருத்தில் கொண்டு தேசிய அரசியலில் வேகமெடுக்க தொடங்கி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.
டெ்ல்லி மாடல் அரசு:
டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்து வருவதன் பயனாக திராவிட மாடல், குஜராத் மாடலுக்கு சவால்விடும் விதத்தில் டெல்லி மாடல் அரசை உருவாக்கி, கல்வி, சுகாதாரத் துறையில் வியக்கத்தக்க மாற்றத்தை கொண்டு வந்து, அதன் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது ஆம் ஆத்மி. டெல்லி மக்களை கண்டு வியந்த பஞ்சாப் மாநில மக்கள், தங்களையும் ஆட்சிபுரியும் அதிகாரத்தை சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மிக்கு அளித்துள்ளனர்.
தேசிய கட்சி அங்கீகாரம்:
டெல்லி, பஞ்சாப் என வடக்கே கால்பதித்த உற்சாகத்தில் அப்படியே தெற்கில் கால் பதிக்கும் ஆவலுடன் கோவா சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அங்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் 7% வாக்குகளுடன் அங்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது.
இந்த அங்கீகாரத்துடன் விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது கெஜ்ரிவாலின் ஆர்மி. மோடி, அமித் ஷா ஆகிய இரண்டு சிங்கங்களையும் அவர்களின் சொந்த கோட்டையிலேயே சந்திக்கும் ஆம் ஆத்மி, இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெற்றுவிட்டாலே போதும்… தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.
பாஜக Vs ஆம் ஆத்மி:
அந்த கெத்தான அங்கீகாரத்துடன் 2024 எம்பி எலக்ஷனை சந்திக்கவுள்ள ஆம் ஆத்மி. இத்தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக இருக்குமா அல்லது காங்கிரசின் வெற்றி வாய்பபை தட்டிப் பறிக்குமா என்ற கேள்வி தேசிய அரசியலில இப்போதே வலம் வந்து கொண்டிருக்கிறது. பாஜக Vs காங்கிரஸ் என்றிருந்த தேசிய அரசியல் தற்போது பாஜக Vs ஆம் ஆத்மி என மாறி வருவதால், 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.