தப்பிய ஓபிஎஸ்… சிக்கிய விஜயபாஸ்கர்: புலம்பல் பின்னணி!

ஆறுமுகசாமி அறிக்கை பற்றிய விவகாரம்தான் தற்போது அதிமுகவினுள் ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. அந்த சமயத்தில் தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தினார். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டு, இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைப்பின்போதும் இதே நிபந்தனையை அவர் முன்வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை 2017ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு அமைத்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், ஓபிஎஸ், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், கடந்த மாதம் 27ஆம் தேதி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தது. 608 பக்கங்கள் கொண்ட ஆணையத்தின் அறிக்கையை முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கை குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர் சிவகுமார், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் உள்ளிட்டோர் மீது விசாரணைக்கு உத்தரவிட ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் அதன்பிறகு விவர அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

“அறிக்கையில் உள்ளவற்றை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டசபையில் வைக்கப்பட்டு, அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து நிறைவேற்றுவோம் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார். இது கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆணையத்தின் ரிப்போர்ட் பற்றி எடப்பாடி பழனிசாமி முகாமுக்குள் சலசலப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்த பெயர்களில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளாராம்.

அதாவது, விசாரணை ஆணையம் கோரியது ஒருபக்கம் இருந்தாலும், அந்த சமயத்தில் முதல்வரின் பொறுப்புகளை ஓபிஎஸ்ஸே கவனித்து வந்தார். ஆனால், அவரது பெயர் இடம்பெறாமல் தனது பெயர் இடம்பெற்றுள்ளது பற்றியும், தனது பெயர் இடம்பெற்றதுக்கு எடப்பாடி பழனிசாமி சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளாராம். தனக்கு ஆபத்து என்றால் பகிரங்கமாக செயல்படவும் அவர் தயங்க மாட்டார். உதாரணமாக அவரது வீட்டில் ரெய்டு நடந்த போது, வீட்டில் இருந்து வெளியேறி தடாலடியாக செயல்பட்டது போல, ஏதேனும் செய்து விடுவார் என்பதால், இபிஎஸ் முகாம் சலசலப்பாக காணப்படுகிறது.

ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் விசாரிக்கையில், “ஆணையத்தால் பரிந்துரை செய்ய முடியுமே தவிர விசாரணை செய்ய முடியாது. அது அரசின் கைகளில்தான் உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருந்தால், விசாரணைக்கு உட்படுத்தச் சொல்லி நான்கு பேரின் பெயர்களை பரிந்துரைத்திருக்காது. இதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அறிக்கையின் அடிப்படையில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மேல் விசாரணையைத் தொடர முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது. வேறு சில பரிந்துரைகளும் அறிக்கையில் இடம் பெற்றிருக்கலாம். சட்டமன்றத்தில் ஆணையத்தின் முழுமையான அறிக்கையை முன்வைக்கும்போதுதான் அதுபற்றி தெரிய வரும்.” என்கிறார்கள்.

“அப்பல்லோ சிகிச்சையில் குறைபாடு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமிரா ஆஃப் செய்யப்பட்டது இன்னமும் கேள்வியாகவே உள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் பெயரை சேர்த்திருக்கும் நிலையில், அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த ஓபிஎஸ், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இடம்பெறாமல் இருப்பது முரணாக உள்ளது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் பெயர்களை தாண்டி மேலும் பலரது பெயர்களும் விசாரணை வளையத்தில் இருக்கலாம். அதுவும் முழுமையான அறிக்கையை வெளியாகும் போதுதான் தெரியவரும்.” என்றும் கூறுகிறார்கள்.

ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து விவாதம் நடத்தும்போது, சசிகலாவுக்கு ஆதரவாக இபிஎஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பேச வாய்ப்பு குறைவு. அப்படி பேசாமல் இருந்தால் அது விஜயபாஸ்கருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். ஆணையத்தின் விசாரணை கோரியதே ஓபிஎஸ்தான். ஆனால், அவர் தற்போது சசிகலா ஆதரவு மனநிலையில் இருப்பதால், அவர் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதும் தெரியவில்லை. திமுகவை பொறுத்தவரை ஆணையத்தின் அறிக்கை அக்கட்சிக்கு ட்ரம்ப் கார்டு போன்றது. இதனை வைத்து அதிமுகவை எப்படியும் அக்கட்சியால் உருட்ட முடியும். ஜெயலலிதாவின் பெயரை வைத்தே அதிமுகவின் செல்வாக்கையும் சரிக்கவும் முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.