சென்னை : நடிகர் விக்ரம் தன்னுடைய கேரக்டர்களை மிகவும் பலமாக தேர்வு செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்ட விக்ரமிற்கு பாலாவின் சேது படம் சிறப்பாக கைக்கொடுத்தது.
அந்த வாய்ப்பையும் வரவேற்பையும் சரியாக பற்றிக் கொண்டு முன்னேறினார் விக்ரம். தன்னுடைய கேரக்டருக்காக இவர் சிறப்பாக மெனக்கெட்டு வருகிறார்.
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் துவக்கத்தில் சில சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அவரை நடிகராக அங்கீரிக்க செய்த படம் சேது. அந்தப் படம் கொடுத்த வெளிச்சத்தை அப்படியே பிடித்துக் கொண்டு தன்னுடைய சினிமா கேரியரை சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளார். தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
விக்ரமிற்கு தமிழக அரசு விருது
ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் வேறு வேறு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருப்பார். அந்த வகையில் தற்போது தமிழக அரசின் திரைப்பட விருதுகள் கடந்த 2009 முதல் 2013 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்ரம் தனது ராவணன் படத்திற்காக இந்த விருதை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது
கடந்த 2010ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை தற்போது விக்ரம் பெற்றுள்ளார். இதையொட்டி நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற விக்ரம், இந்த விருதினை அமைச்சர்கள் மற்றும் மேயர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் அவர் மிகவும் ஸ்மார்ட்டான லுக்கில் கலந்துக் கொண்டார்.
ராவணன் படம்
ராவணன் படத்தில் நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்வி, பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டரை தன்னுடைய நடிப்பால் சிறப்பாக்கியிருந்தார் விக்ரம். படத்தின் கதை அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
வீரய்யா கேரக்டர்
படத்தில் வீரய்யா என்ற கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது குறித்து விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்லாயிரம் நன்றிகளை தெரிவித்துள்ளார். வீராவிற்கு கிடைத்த இந்த பாராட்டுக்கும் மரியாதைக்கும் அவர் நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்லாயிரம் நன்றி தெரிவித்த விக்ரம்
மேலும் என் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பதிவில் ராவணன் படத்தில் தனக்குள் ஏற்பட்ட பொறாமை குறித்து அவர் ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சிகளையும் இணைத்துள்ளார். உணர்வுப்பூர்வமான இந்தக் காட்சிகள் படத்தில் முக்கியமானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.