300 யூனிட் இலவச மின்சாரம்… ரூ. 3 லட்சம் விவசாய கடன் ரத்து : குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500 க்கு விற்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், 300 யூனிட் இலவச மின்சாரம், 10 லட்ச ரூபாய் வரை இலவச மருத்துவம், 3 லட்ச ரூபாய் வரை விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த ராகுல் காந்தி வேலையில்லா இளைஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை ரத்து செய்யப்பட்டு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்த ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் 3000 ஆங்கில வழி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலவசங்களை ஒழிக்கப்போவதாக சுதந்திர தினத்தில் சூளுரைத்த பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கும் இந்த சலுகைகள் பாஜக-வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பாஜக ஆட்சியின் கீழ் அம்மாநில மக்கள் பெற்றிருக்கும் வளர்ச்சியையும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.