இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒருசில நாட்களில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. சுமார் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வெற்றி பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சா வழியைச்சேர்ந்தவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரி ஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல் ஆகஸ்டு 2ந்தேதியுடன் முடிவடைந்தது.  கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள்  அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், லிஸ் டிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிஷி சுனக்  தோல்வி அடைந்துள்ளது. லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்ற நிலையில், ரிஷி சுனக், 60,399 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் சுமார் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ்டிரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கட்சி தலைவருக்கான தேர்தலில், தான் தோற்கடிக்கப்பட்டால்,  அடுத்து அமையும்  அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன் என்று ரிஷி சுனக் கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.