சேலம்; சில்மிஷ இயக்குநரை சிறையில் அடைத்த காவல்துறை; இளம் பெண்கள் சரமாரி புகார்

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38), அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அந்த சினிமா கம்பெனியில் போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவை போலீசில் சிக்கியது.

இயக்குநரின் ஹார்டு டிஸ்குகளில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அப்பெண்களை  மோசமாக படமெடுத்து சீரழித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என 400 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோ டேட்டா கொடுத்துள்ளனர். அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் சிலரிடம் தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தலா ரூ.30 ஆயிரம் வரையில் வேல்சத்ரியன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயோடேட்டா கொடுத்தவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கேமராவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் படங்கள் உள்ளன. ஹார்டுடிஸ்க்கில் சில பெண்களின் அரை நிர்வாண படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது படத்தில் உள்ள பெண்களை கண்டறிந்து வரவழைத்து போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் புகாரைபெற்றுக்கொண்ட போலீசார், ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த படங்கள் எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அழிக்கப்பட்டால் அந்த பதிவுகளை மீண்டும் எடுக்கமுடியுமா? என ஆய்வுக்காக சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்ப உள்ளனர்.

இதனிடையே பெண்களை தொலைபேசியில் பேசி மயக்கும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை நடிக்க பழகுவது குறித்த ஆபாசமான வார்த்தைகளை அந்த பெண்ணின் தாயிடமே சொல்லி அனுமதி கேட்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகி யோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.