500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரா?- என்ன சொல்றாரு ராகுல் ஜி!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அவரது வலதுகரமாக அறியப்படும் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் அங்கு இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக.

பாஜகவின் கோட்டையை இந்த முறை எப்படியாவது தகர்த்தெறிந்தே ஆக வேண்டும் என்ற துடிப்பில் களமிறங்கி உள்ளது காங்கிரஸ். தற்போது அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், அரியணையில் ஏற வாக்காளர்களை கவரும் நோக்கில் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.

இதிலொரு முக்கிய அம்சமாக விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், ” பாஜக படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை வைத்துள்ளது. ஆனால் அவர் யாருக்காக (விவசாயிகளுக்கு) போராடினாரோ அவர்களின் நலனை பாஜக அரசு மறுந்துவிட்டது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்.

இளைஞர்கள் நலனுக்காக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முக்கியமாக, சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்” என்று அடுக்கடுக்கான வாக்குறுதியை அள்ளி வீசினார்.

பாஜக, காங்கிரஸ் என தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் குஜராத்தில் இந்த முறை ஆம் ஆத்மியும் களம் காண்பதால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மியும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை என வெகுஜென மக்களை கவரும் விதமாக இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளதால், தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு அக்கட்சி செம டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.