புதுச்சேரி : ‘ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என முதல்வர் ரங்க சாமி தெரிவித்தார்.
ஆசிரியர் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
எழுத்தறிவித்தவன் இறைவன் என கூறுவார்கள். அதனால் தான் ஆசிரியர்களை இறைவனோடு ஒப்பிடுகின்றனர். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். 5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும்.நான் விழாக்களில் பேசும் போது, ‘எப்படி பேசுகிறீர்கள்? புத்தகம் படிப்பீர்களா’ என கேட்பார்கள்.
நான் புத்தகம் படிப்பதில்லை, நாளிதழ்கள்தான் பார்க்கிறேன்.இருப்பினும் பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை நினைவில் வைத்து பேசுகிறேன். மாணவர்களை கண்டித்து, அறிவுரை கூறி ஆசிரியர்கள் கல்வியை போதிக்க வேண்டும். பள்ளிக் கல்வி மிகவும் முக்கியமானது.இதனால் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை உருவாக்கி உள்ளோம். கற்றல், கற்பித்தல் மையத்தை பள்ளிகளில் தொடங்கி உள்ளோம்.மாணவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் தங்களின் தரத்தை உயர்த்த முடியும்.
வசதியில்லாதவர்கள் தனியார் பள்ளிகளில் மாணவர் களை சேர்க்கின்றனர். அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி இலவசமாக கல்வி அளித்து வருகிறது. மாணவர்களுக்கு உணவு, உடை அளித்து வருகிறோம். ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இதை செய்து வருகிறோம்.நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, ‘நீங்கள் அமைச்சராக வரக்கூடாது என்பதற்காகத்தான் கல்வி அமைச்சர் பதவியை அளித்துள்ளனர்’ என்றனர்.
நான் அப்போது எடுத்த முடிவுகள்தான் மீண்டும் அரசு அமையவே காரணமாக இருந்தது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினோம். தகுதியான ஆசிரியர்கள் பலர் வேலை பெற்றனர். சிறந்த ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு கிடைத்தனர்.பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கி உள்ளோம். தற்போது ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப உள்ளோம். விரைவில் இதற்கான பணி தொடங்கும். ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் தீர்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement