புதுடெல்லி: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை நேற்று முதல் டெல்லியில் துவக்கியுள்ளார், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார். இவருக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் சவாலாகவும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெரும் தடையாகி விட்டதாகவும் தெரிகிறது.
பாஜக கூட்டணியிலிருந்து சமீபத்தில் வெளியேறியவர் ஐக்கிய ஜனதா தள(ஜேடியு) கட்சித் தலைவரான நிதிஷ்குமார். இதனால், தமது பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார். பிறகு மீண்டும் பிஹாரின் முதல்வரானவர் தற்போது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தனது கட்சி அனுமதியுடன் முதல்வர் நிதிஷ் இறங்கியுள்ளார்.
இதற்காக நேற்று அவர் ஆர்ஜேடியின் நிறுவனரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவை அவரது பாட்னா வீட்டில் சந்தித்த பின் டெல்லிக்கு கிளம்பினார். இங்கு அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் சவாலாகி உள்ளார்.
ஏனெனில், டெல்லி முதல்வரான கேஜ்ரிவாலின் கட்சி பஞ்சாபையும் சேர்த்து இரண்டு மாநிலங்களில் ஆள்கிறது. கோவாவின் சட்டப்பேரவை தேர்தலிலும் கடும் போட்டியாளராக உருவானது.
அடுத்து குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் சட்டப்பேரவை தேர்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறது. எனவே, 2024-ல் மீண்டும் பிரதமர் வேட்பாளராகும் நரேந்திர மோடியை எதிர்க்க தாமே தகுதியானவர் என அறிவித்துள்ளார் கேஜ்ரிவால். இப்போட்டியில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை எனவும் ஏற்கெனவே அறிவித்தும் உள்ளது.
இத்துடன், செப்டம்பர் 7 முதல் கேஜ்ரிவால், ‘மேக் இந்தியா நம்பர் ஒன் (இந்தியாவை முதல் வரிசையாக்குவது)’ எனும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதுவே அவரது 2024 மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் எனவும் ஆம் ஆத்மி கட்சியினர் நம்புகின்றனர். பாஜகவை எதிர்க்க கேஜ்ரிவால் ஒருவரால் மட்டுமே முடியும்எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆம் ஆத்மியின் கேஜ்ரிவாலை எப்படி சமாளிப்பார் எனக் கேள்வி எழுந்துள்ளது. மேலும், தமக்கு சாதகமாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தமது கட்சிக்கு தடையாக இருப்பதால் அதனுடன் கூட்டணி வைக்க முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஒப்புதல் இல்லை.
இச்சூழலில் அவர் பிரதமருக்கானப் போட்டியிலிருந்து விலகினாலும் காங்கிரஸ் இடம்பெற்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சேர மாட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நிதிஷை நம்பியுள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அவர் கேஜ்ரிவாலை சமாளிப்பதை பொறுத்தே தாம் பாஜகவை எதிர்கொள்ள முடியும் என நம்பியுள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சிகளில் முக்கிய தலைவராகக் கருதப்படும் திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜியின் நடவடிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படத் துவங்கி உள்ளன.
முதல்வர் நிதிஷுக்கு முன்பாக மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தாவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயன்றார். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன் அவரது கட்சி வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக திடீர் என அறிவித்துள்ளது. தம் கட்சிக்கு கிடைக்கும் தொகுதிகளை பொறுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின் இதர கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
முதல்வர் மம்தாவின் இந்த முடிவு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயலும் நிதிஷுக்கு பெரும்தடையாகி உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜகவிற்கு 50 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது எனக் கூறும் நிதிஷின் முயற்சிக்கு முன்பாகவே தடைகள் கிளம்பி விட்டதாகவும் கருதப்படுகிறது.