ஐக்கிய தேசிய கட்சி இன்று அதன் 76ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது சம்மேளன கூட்டம் “ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இன்று (06) மாலை இடம்பெறும்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கு தலைமை தாங்குவார்;. கட்சி உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பாராளுமன்றம் சாராத அனைத்து கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இந்த நிறைவாண்டு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தசாப்தத்தில் டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் காணப்பட்டது போன்ற தன்னிறைவுள்ள நாடொன்றை கட்டியெழுப்புவது ஐக்கிய தேசிய கட்சியின் இலக்காகும் என கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
இலங்கை தேசிய சங்கம். சிங்கள மஹா சபை, மேன்;நிலை வர்க்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சில தமிழ் தலைவர்கள் இணைந்து 1946ஆம் ஆண்டு செப்டெம்பர் ஆறாம் திகதி கொழும்பு கறுவாந்தோட்டம் கில்பிரீட் சந்திரவங்க பாம்கோர்ட் மாளிகையில் கூடி நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ஐக்கிய தேசிய கட்சி உருவானது.
சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அரசியல் கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும். டி.எஸ்.சேனநாயக்க கட்சியை நிறுவுவதற்கு முன்னின்று செயற்பட்டார். கட்சி உருவாக்கப்பட்ட சமயத்தில் ஜே.எல்.கொத்தலாவல இணைப்பாளராக செயற்பட்டார். நிர்வாக சபை தெரிவின் போது மஹாமான்ய டி.எஸ்.சேனநாயக்க கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்க, ரி.பி.ஜாயா, அருணாச்சலம் மகாதேவன், எஸ்.நடேசன், ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஆர் டீ சில்வா ஆகியோர் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் முதலாவது செயலாளர் எச்.எம்.அமரசூரிய ஆவார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.ஏ.ராசிக் ஆகியோர் பொருளாளர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.