மதுரை:மதுரையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மழை மற்றும் கடும் முகூர்த்த தினங்கள் காரணமாக மதுரைக்கு மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கடந்த 1 வார காலமாக உயர்ந்து காணப்படுகிறது. வழக்கமாக ரூ.800 வரை விற்கப்படும் கிலோ மல்லிகை பூ விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.1,800 வரை உயர்ந்தது.
தற்போது மல்லிகை பூ கிலோ ரூ.3,000-க்கும், ரூ.50-க்கு விற்ற சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.300-க்கு விற்ற பிச்சிப்பூ, முல்லை பூக்கள் ரூ.1,000-க்கும் விற்பனை ஆகின்றன. இதேபோன்று ரூ.50-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஸ் ரூ.250-க்கும், ரூ.30 ஆக இருந்த அரளி பூ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது. நாளை முதல் முகூர்த்த தினங்கள் என்பதால் பூக்கள் விலை மிக உயர்ந்திருப்பதாக கூறும் வியாபாரிகள் வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.