ஒட்டாவா: கனடாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 13 இடங்களில் நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குயின மக்கள் அதிகம் வசிக்கும் ‘ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன்’ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் இந்த கிராமத்திலும் அதன் அருகில் உள்ள வெல்டன் என்ற கிராமத்திலும் அடுத்தடுத்து 13 இடங்களில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்தன.
இந்த தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மைல்ஸ் (30), டேமியன் சாண்டர்சன் (31) என்ற இருவரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சந்தேகத்திற்குரிய இருவரும் முதலில் குறிப்பிட்ட சிலரை குறிவைத்து தாக்கியுள்ளனர். பிறகு கண்ணில்படும் நபர்களை எல்லாம் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கான காரணம் தெரியவில்லை. அவர்களை பிடிக்க இந்தப் பிராந்தியம் முழுவதிலும் சாலைகளில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.
சந்தேகத்திற்குரிய நபர்களை 300 கி.மீட்டருக்கு அப்பால், சஸ்காட்செவன் தலைநகர் ரெஜினாவில் கண்டதாக சிலர் கூறியதால் ரெஜினா மற்றும் அண்டை மாகாண போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.