புதுடெல்லி: மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் பணம் பெற்றது உண்மை என்று கூறி 2 வீடியோக்களை பாஜக வெளியிட்டுள்ளது.
டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் மணிஷ் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்யமுயன்ற சிபிஐ அதிகாரி, ஜதேந்திரகுமார் தற்கொலை செய்துகொண்டார். அவர் சிபிஐ-யில் ஊழல் தடுப்புப் பிரிவின் துணை சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்தார்.
இதுகுறித்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று கூறும்போது, “திடீரென சிபிஐ விசாரணைஅதிகாரி ஜிதேந்திர குமார் தற்கொலை செய்து கொண்டார். தவறான முறையில் என்னைக் கைதுசெய்து சிக்கலில் மாட்ட வைக்கசட்டவிரோதமாக அனுமதியளிக்கு மாறு அவருக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. என்னை சிக்க வைக்கதொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மேலிடத்திலிருந்து வந்தஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்” என்றார். இதற்கு சிபிஐ தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: வழக்கு தொடர்பாக டெல்லிதுணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நடந்து வரும்விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது. அவரது கருத்துக்கள் தவறாக வழிநடத்திச் செல்கின்றன. சிபிஐ அதிகாரி ஜிதேந்திர குமாருக்கும், மணிஷ் சிசோடியா மீதான வழக்குக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என்பது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அவர் சிபிஐ-யின் பல்வேறு வழக்கு விசாரணைகளில் துணை சட்ட ஆலோசகராக இருந்தார்.
டெல்லியில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை நடத்தும் வழக்கறிஞர்களை அவர்மேற்பார்வையிட்டு வந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது உண்மை என்றும், அதற்காக ஆம் ஆத்மிதலைவர்கள் பணம் பெற்றுள்ளார்கள் என்றும் பாஜக வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
ஸ்டிங் ஆப்பரேஷன் என்ற பெயரில் இந்த 2 வீடியோக்களை, பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா வெளியிட்டார். அவர்கூறும்போது, “மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஆத் ஆத்மி தலைவர்கள் பணப்பயன் அடைந்துள்ளனர். இதன்மூலம் டெல்லி அரசு ஊழல் அரசுஎன்பது தெளிவாகியுள்ளது. இந்த வழக்கில் சிக்கியுள்ள சன்னி மார்வாவின் தந்தை குல்விந்தர் மார்வாவின் வீடியோவும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்புப்பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கும் மதுபானக் கடை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில்குல்விந்தர் மார்வாவே அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள மதுபானவர்த்தகர்கள் யாரும் அச்சப்படவேண்டாம். மணிஷ் சிசோடியா வுக்கும், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் எவ்வளவு கமிஷன்கொடுத்துள்ளார்கள் என்பது வீடியோவாகவே வெளிவந்துவிட்டது.
இப்போது கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தப்பிக்க எந்த வழியும் இல்லை. கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபோது, எந்தவிதமான ஊழல்குறித்தும் மக்கள் ஸ்டிங் ஆப்பரேஷன் நடத்தி வெளியிடுங்கள் எனத்தெரிவித்தார். அதுதான் உண்மையாகவே இப்போது நடந்துள்ளது” என்றார்.