பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாளாக பெய்த கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ந்து வரும் நகரில் வளர்ச்சி பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
நகரில் வெள்ள நீர் வடியாததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்கள், டிராக்டர் மூலம் பணிக்கு சென்றனர். பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் உள்ள குடிநீரேற்றும் இடத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
ஐடி நிறுவனங்கள் அமைந்த பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 500 மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், தான் பெங்களூரு வெள்ளத்தில் மிதப்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பெங்களூருவில் அவசர நிலையை சமாளிக்க ரூ.300 கோடி ஒதுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வெள்ள சூழ்நிலையை சமாளிக்கவும் ரூ.300 கோடி ஒதுக்கப்படும். வெள்ளத்தில் 430 வீடுகள் முழுமையாகவும், 2,188 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 225 கி.மீ., சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement