குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகம் டேன் டீ நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் டேன் டீ தோட்டங்களில் தேயிலை பறிக்க குடியமர்த்தப்பட்டனர். ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட வீடுகளில் தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர். வீடுகள் பழுதடைந்துள்ளதால் மழை காலத்தில் வீடுகளில் தண்ணீர் ஒழுகும் நிலை உள்ளது. கோத்தகிரி அருகே உள்ள கர்சன் வேலி டேன் டீ குடியிருப்பில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை 3 கிலோமீட்டர் தொலைவு தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்ந்து வரும் மக்கள் அத்யாவசிய தேவையான பால் உள்ளிட்டவை வாங்க மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அவரச தேவைக்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர். 30 குடும்ப மக்கள் தங்களது வாழ்க்கையை தேயிலை தோட்டத்திலேயே கழித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாதததால் தங்களது பிள்ளைகளை படிக்க வெளி பகுதியில் தங்க வைக்க போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தினசரி 25 கிலோ தேயிலை பறித்து 350 கூலி பெற்று வாழும் எங்களுக்கு நகர் பகுதியில் எப்படி எங்களது பிள்ளைகளை கல்வி கற்க தங்க வைப்பது என்று கேள்வி எழுப்புகின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சப்படி 3 முதல் 5 ரூபாய் வரை டேன் டீ நிர்வாகம் வழங்கி வந்தது. ஆனால் தற்போது அதையும் பிடித்துக்கொண்டு 348 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
கர்சன் வேலி பகுதியில் அரசியல் கட்சிகள் வந்து சாலை வசதிகள் செய்து தருவதாக உறுதியளிக்கின்றனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேயிலை தோட்டத்தில் தினசரி ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் மத்தியில் இலை மட்டுமே பறிக்க பழகிய எங்களுக்கு வேறு வழி இல்லை என கண்ணீர் விடுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் 15 கிலோ இலை பறித்தோம் அப்போது மருத்துவ காப்பீடு என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்தனர். தற்போது 25 முதல் சீசன் காலங்களில் 50 கிலோ வரை இலை பறித்தும் எங்களது குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு கூட இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். டேன் டீ நிர்வாகத்தில் மருத்துவ மனை உள்ளது. ஆனால் எங்களது குடியிருப்பு பகுதியில் அவசர தேவைக்கு அழைத்தால் சாலை இல்லாததால் வர மறுத்து வருவதாக தெரிவித்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்பில் வசித்தோம். ஆனால் அங்கு அதிகாரிகளை தங்க வைப்பதாக கூறி நிர்வாகம் எங்களை சாலை வசதி இல்லாத பகுதிகளில் குடியமர்த்தியதாக தெரிவித்தனர்.
இது குறித்து கர்சன் வேலி பகுதியை சேர்ந்த காந்திமதி கூறுகையில், இலங்கையில் இருந்து வந்த காலத்தில் இருந்து டேன் டீ தோட்டங்களில் தேயிலை பறித்து வாழ்ந்து வருகின்றோம். அத்யாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ தேவை என்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால் தனியார் வாகனங்கள் அதிக தொகை கேட்பதால் அதற்கும் வழி இல்லை என்றார். கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை தற்போது வரை உள்ளதாக தெரிவித்தார்.
அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி கூறுகையில், ‘டேன் டீ குடியிருப்பு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்டது. தற்போது வரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. கழிவறைகள் இல்லாததால் வனப்பகுதிக்கு இங்கு வசிக்கும் மக்கள் சென்று வருகின்றனர். குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அவை வீட்டில் ஓடுகளை உடைப்பதால் மழை நாட்களில் அதிகமாக ஒழுகுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர். தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் டேன் டீ நிர்வாகம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தட்டிகழிப்பதாக தெரிவித்தனர்.
அதே பகுதியை சேர்ந்த யோகேஷ்வரி கூறுகையில், ‘சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதததால் எங்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வெளியே தங்கி வருகின்றனர். நாங்கள் நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைக்கும் பணம் போதுமானதாக இல்லை. மேலும் டேன் டீ நிர்வாகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்க்கு வேலை தருகின்றனர். ஆனால் எங்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் படித்துவிட்டு வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு டேன் டீ நிர்வாகத்தில் ஏன் வேலை தருவதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து தேனாடு பஞ்சாயத்து திமுக தலைவர் ஆல்வின் கூறுகையில், ‘கர்சன் வேலி குடியிருப்பு தேனாடு பஞ்சாயத்துக்குட்பட்டதாகும். தேனாடு பஞ்சாயத்து சார்பில் கூப்பு டேன் டீ பகுதிக்கு சிறப்பு நிதி மூலம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் நீர்கண்டி பகுதியில் 15 ஆவது நிதி திட்டத்தின் கீழ் சாலை வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. செடிகள் பழங்குடியின கிராமத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. குருகுந்தா பகுதியில் வனத்துறையினரிடம் ஒப்புதல் பெற்று 700 மீட்டர் சாலை பணிகள் நடைபெற்றுள்ளது.
கர்சன் வேலி பகுதியில் சாலை அமைக்க கலெக்டரிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார். அது மட்டுமின்றி டேன் டீ நிர்வாகமும் முன்வந்தால் அந்த கிராமத்திற்கு சாலை வசதிகள் ஏற்படுத்தி தர சாதகமாக அமையும் என்றார்.எனவே டேன் டீ நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் கர்சன் வேலி பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
யார் இந்த தாயகம் திரும்பிய தமிழர்கள்
1954-ம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகாவும், இந்திய பிரதமர் லால் பகதூர் சஸ்த்திரியும் செய்த ஒப்பந்தத்தின்படி ஆங்கிலேயர் ஆட்சியின்போது குடியேற்றப்பட்ட மலையகத்தமிழர்கள் என அழைக்கப்படும் தோட்டப்புறத்தில் வாழ்ந்த 5 லட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தயாகம் திரும்பிய அகதிகளாக வந்தனர். இதற்கு பதிலாக இலங்கையில் இருந்த 3 லட்சம் இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட்டது.
இருசாராரும் தீர்வு காணாத 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழகர்கள் இருந்தார்கள். இவர்கள் நாடற்றவர்களாக கைவிடப்பட்டனர். இவர்கள் கூலி வேலை செய்யலாம். உயர் கல்வி உரிமை இல்லை. சிறு வர்த்தகம் கூட தொடங்க முடியாது. நாட்டை விட்டு வெளியே செல்லவும் இயலாது என்பது தனி சோக கதை.