சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுவை எதிர்த்து
தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்த பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அவர் துரிதமாக மேற்கொண்டு வந்தார். இதனிடையே, பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்
, அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதற்காக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்களுக்கு சாதகமான சட்ட நுணுக்கங்கள், அதிமுக சட்டங்கள் பற்றி குறிப்பிட்டு வலுவாக வாதாட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, நீதிமன்ற நடவடிக்கைகளை தாண்டி ஓபிஎஸ் என்ன மாதிரியான மூவ்களை செய்து வருகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, தற்போதைக்கு சட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு வழக்கறிஞர்கள் டீமுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரங்களை மனோஜ் பாண்டியன் கவனித்துக் கொள்கிறார். அதேபோல், கட்சி ரீதியான விவகாரங்களை வைத்திலிங்கம் முன்னின்று செய்து வருகிறார். இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து விட்டார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்படவில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் காலாவதி ஆகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள். அதிலும் சிக்கல் உள்ளது.
அத்துடன், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவர் இணைந்து கூட்டும் பொதுக்குழுவே செல்லும். எனவே, இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை ஓபிஎஸ் நியமித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் பொதுக்குழுவை கூட்டவுள்ளனர். அதில், எடுக்கும் முடிவுகளை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கவுள்ளோம். பொதுக்குழுவை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சசிகலா கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட்டம் நடத்தி எங்களது பவரை காண்பிக்க உள்ளோம். கட்சி நிர்வாகிகள் பலரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாகத்தான் வரும்.” என்கிறார்கள் நம்பிக்கையுடன்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை ஏற்க சொல்லி தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஓபிஎஸ்ஸின் கடிதம் ஏற்கப்படும் பட்சத்தில் அது இபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதுபற்றி இபிஎஸ்ஸிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டியதால், அவசர அவசரமாக தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என கோரி தேர்தல் ஆணையத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளார். இதுபோன்று பல்வேறு சட்ட சிக்கல்கள் எடப்பாடி தரப்புக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் போவதாகவும் கூறுகின்றனர்.