கராச்சி: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மீட்கப்பட்டு உள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பென்ட்லி நிறுவனம் பென்ட்லி முல்சானே ரக கார்களை தயாரிக்கிறது. இந்த வகை கார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் விற்கப்படுகிறது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அண்மையில் பென்ட்லி முல்சானே கார் திருடுபோனது. இதுதொடர்பாக அந்த நாட்டு போலீஸார் விசாரணை நடத்தி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கார் கடத்திச் செல்லப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு சார்பில் பாகிஸ்தான் அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பாகிஸ்தானின் சிந்து மாகாண சுங்க வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கராச்சி நகரில் அமைந்துள்ள ராணுவ வீட்டுவசதி ஆணைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பென்ட்லி முல்சானே சொகுசு கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த காரில் பாகிஸ்தான் பதிவு எண் இருந்தது. காரை ஆய்வு செய்தபோது லண்டனில் திருடு போன கார் என்பது உறுதி செய்யப்பட்டது.
காரை வைத்திருந்த ஜமீல் ஷபி என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, நவீத் பில்வானி என்பவர் காரை தன்னிடம் விற்பனை செய்ததாக கூறினார். இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கார் கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கக்கூடும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூலம் பாகிஸ்தானுக்கு கார் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை அரங்கேற்றுவது எளிது. எனினும் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இருந்து இந்த காரை எவ்வாறு பாகிஸ்தானுக்கு கடத்தி வந்தார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மீட்கப்பட்ட கார் விரைவில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.