ஜெய்ப்பூர்: இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் கேட்டு, பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. இப்படிக்கூட எங்காவது நடக்குமா? என்று மலைத்து போய் கேள்வி கேட்கிறார்கள்.
வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கு தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்து, மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது..
பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. அந்தந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுத்தாலும், அதற்கு ஆளும் தரப்புகள் சரியான தீர்வை அணுகாமலேயே உள்ளன..
பஞ்சாயத்து
இதைதவிர, பஞ்சாயத்து என்ற பெயரில் ஊருக்கு நடுவே பெண்களை நிற்க வைத்து, அவர்களின் மானத்தை வாங்குவதும், இழிவாக நடத்தப்படுவதும் தொடர்கிறது.. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களே என்பது, அதைவிட வருத்தமான செய்தி.. இப்படிப்பட்ட சூழல்களில், ராஜஸ்தானில் வினோதமான நடைமுறை ஒன்று பரவி வருகிறது.. அங்கு நாடோடிகள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்களுக்கு சன்சி நாடோடி என்று பெயர்..
கன்னித்தன்மை
இவர்கள் சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே, அந்த புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கின்றனர். இந்த டெஸ்ட்டில் அந்த பெண் வெற்றி பெற வேண்டுமாம்.. அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும்… இப்படிப்பட்ட நடைமுறையை, “குகடி பிரடா” என்று பெயரிட்டுள்ளார்கள்.. அந்த வகையில், ஒரு இளம்பெண், தற்போது சிக்கி கொண்டுள்ளார்.. பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 24 வயதாகிறது..
டெஸ்ட் கன்னித்தன்மை
திருமணமாகிவிட்டது.. பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி இவருக்கு திருமணம் நடந்துள்ளது… இந்நிலையில், நேற்றைய தினம், தன்னுடைய மாமியார் வீட்டினர் மீது திடீரென போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில், “தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்தனர் என்றும் அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டி, கொடுமைப்படுத்துகின்றனர்” என்றும் தெரிவித்து உள்ளார்… இதன் பின்னணி என்னவென்று பார்த்தால், அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்… இதுபற்றி சுபாஷ் நகர் போலீசிலும் ஏற்கனவே புகார் தரப்பட்டுள்ளது..
மாப்பிள்ளை
மணமகள் மீது போலீசில் கேஸ் உள்ளது என்று, மாப்பிள்ளை வீட்டினர் கேள்விப்பட்டுள்ளனர்.. அதனால், ஆத்திரம் அடைந்தவர்கள், கல்யாணம் ஆன அன்றே, உடனடியாக அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை டெஸ்ட் செய்துள்ளனர்.. இதில் தோல்வி அடைந்து விட்டால், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை மாப்பிள்ளை வீட்டுக்கு தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், கணவர், மாமியார் இருவரும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
பஞ்சாயத்து
இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கும் சென்றுள்ளது… மே 31-ந்தேதி கோவிலில் இதற்கான பஞ்சாயத்து நடந்துள்ளது.. அப்போது பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது… இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்… 10 லட்சம் தர வழியில்லாத நிலையில், கணவன் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலையில், கடைசியில் இந்த பெண் போலீசுக்கு புகாருடன் வந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பெண்ணின் நன்மதிப்புகளை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமனார்
நடந்த சம்பவம் பற்றி போலீஸ் துணை சூப்பிரெண்டு சுரேந்திர குமார் சொல்லும்போது, அந்த பெண்ணின் மாமனார் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கிறார்… சம்பவம் பற்றி அவருக்கு எல்லா விஷயமும் தெரியும்” என்று மட்டும் தெரிவித்துள்ளார்.. இப்படி ஒரு சம்பவம் வடமாநிலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைதாகவில்லை என தெரிகிறது.. இப்படி விநோத வழக்கம் நடைமுறையில் உள்ளது குறித்தும் சமூக ஆர்வலர்கள் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை..
மறைப்பு + மறக்கடிப்பு
பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..! ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது.. இந்த விஷயத்தை, இனியாகிலும் சீரியஸாக நாம் அணுக வேண்டி உள்ளது..!