ஈரோட்டில் இருந்து கூடலூருக்கு இயக்கப்பட்டுவரும் அரசு பேருந்தின் உள்ளே மழைநீர் கொட்டியதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே குடைகளை பிடித்தபடி பயணிகள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேபோல் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நிற்பதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் இருந்து கூடலூருக்கு திரும்பிய அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. ஊட்டியை கடந்து வரும்போது கடும் குளிரில், கொட்டும் மழை நீரில் நனைந்தபடி குழந்தைகளை வைத்துக்கொண்டு பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பயணிக்க தகுதியில்லாத அரசு பேருந்துகளை நெடுந்தொலைவிற்கு இயக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM