Bangalore rain: வரலாறு காணாத மழை.. வெனிஸ் போல் மாறிய பெங்களூரு.. முழு நிலவரம்!

கர்நாடகவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடாது மழை விடாது பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரின் முக்கிய பகுதியான சர்ஜாபூர், மெஜிஸ்டிக், சில்க்போர்டு, எலங்கா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மணிநேரம் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.

பெங்களூரு நகரின் ஒயிட் பீல்டு பகுதியில் வெள்ளநீரில் இருசக்கர வாகனத்தை தள்ளிச்சென்ற அகிலா(23) என்ற இளம்பெண் மின் கம்பத்தில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் டிராக்டர், ஜேடிபி மற்றும் படகுகளை பயன்படுத்தி அலுவலங்களுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து ஒன்றை பொதுமக்கள் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.

பெங்களூரு நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மழைநீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாழ்வான பகுதியில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.