வனப் பகுதிகளில் மின் கம்பிகள் அமைக்கும் பணி: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை காப்பிடப்பட்ட கம்பிகளாக (Insulation Cable) மாற்ற தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (செப்டம்பர் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ரயில்வே துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், யானைகள் அதிகம் கடக்கும் ரயில்வே தண்டவாளங்களை கண்டறிந்து, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கேமரா என்ற கணக்கில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறப்பதை தவிர்க்க முடிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வன விலங்குகள் கடக்க சுரங்க பாதை அமைக்கும் பணி, ஓராண்டு காலத்திற்குள் முடிவடைந்து விடும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை காப்பிடப்பட்ட கம்பிகளாக (Insulation Cable) மாற்றுவதால், யானைகள், பிற விலங்குகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தவிர்க்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் வன விலங்குகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, கேமராக்கள் பொறுத்தவும், யானைகளை காப்பாற்ற தெர்மல் சென்சார் பயன்படுத்தி அதனை கண்காணித்து, ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்க ஒரு நபரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தி விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.