லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராகி இருக்கிறார் கன்சர்வேடிவ் கட்சியின் லிஸ் ட்ரஸ். மேலும் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி கடந்த ஒருமாதமாக தீவிரமாக நடந்து வந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) லிஸ் ட்ரஸ் அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
யார் இந்த லிஸ் ட்ரஸ்: லிஸ் ட்ரஸ் 1975 ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மேரி எலிசபெத் ட்ரஸ். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் தத்துவயியல், அரசியல், பொருளாதாரம் பயின்ற லிஸ் ட்ரஸ் பட்டப்படிப்பு முடிந்ததும் கன்சர்வேடிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
லிஸ் ட்ரஸின் ஆரம்பக் கால அரசியல் பயணம் தோல்விகளை சந்தித்தாலும் 2006 ஆம் ஆண்டும் தென்கிழக்கு லண்டன் பகுதிில் உள்ள கிரீன்விச்சின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது அரசியல் பயணம் ஏறுமுகமாக அமைந்தது. பின்னர், 2010 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சர், சுற்றுச்சூழல் செயலாளர், பிரிட்டனின் வர்த்தக செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல பதவிகளில் அங்கம் வகித்தார்.
பிரிட்டனின் பிரதமர்களாக இருந்த டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய மூன்று பிரதமர்களின் கீழ் லிஸ் ட்ரஸின் பயணம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அவரது திறமையான பணியின் காரணமாக அவர் தொடர்ந்து வெளிச்சத்திலேயே இருந்தார். அந்த வெளிச்சமே தற்போது லிஸ் ட்ரஸுக்கு பிரதமர் பதவியை பெற்று தந்துள்ளது.
பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர்: பிரிட்டன் வரலாற்றில் இதுவரை லிஸ் ட்ரஸ்ஸுடன் சேர்த்து மூன்று பெண்கள் பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னர் மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோர் பிரிட்டன் பிரதமர்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
காத்திருக்கும் சவால்கள்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சனின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பிரிட்டனின் பொருளாதார சரிவு. பிரெக்ஸிட் வெளியேற்றத்துக்குப் பிறகு, பிரிட்டனின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திட்டமோ, தொலைநோக்குப் பார்வையோ போரிஸிடம் இல்லாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாகவே போரிஸ் ஆட்சியில் 40 வருடங்களில் இல்லாத விலையேற்றம், 300 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்த நிலை பிரிட்டன் வாசிகளை கதிகலங்கச் செய்தது. கரோனாவுக்குப் பிறகு பிரிட்டனின் ஏற்றுமதியும், வேலைவாய்ப்பும் தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது. இவற்றை எல்லாம் திறம்பட சரி செய்ய வேண்டிய நிலையில் லிஸ் ட்ரஸ் உள்ளார்.
வரி விதிப்பில் மாற்றம்: இங்கிலாந்தின் பொருளாதாரம் வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று லிஸ் ட்ரஸ் உறுதியளித்திருந்தார். அவர் உறுதியளித்தப்படி அதனை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். உண்மையில் லிஸ்ஸின் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர இந்த பிரதமர் பதவி சிறந்த வாய்ப்பு என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் பிரிவினை: பிரிட்டனில் இனவாதம் அதிகரித்து வருகிறது. பூர்வீக பிரிட்டன் மக்கள் – ஆப்பிரிக்க வம்சாவளி பிரிட்டன் மக்கள் – ஆசிய வம்சாவளி பிரிட்டன் மக்கள் என அங்கு இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்தப் பிரிவினையை தவிர்த்து ஆரோக்கிய சமூகச் சூழலை உருவாக்குவதிலும் லிஸ் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவுடனான உறவு: போரிஸ் ஜான்சன் ஆட்சியில் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக லிஸ் ட்ரஸ் திறம்பட செயல்பட்டார். அப்போது இந்தியா – பிரிட்டன் இடையே மேம்படுத்தப்பட்ட பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுதாகின. இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் தொடக்கப் புள்ளியாகவும் அந்த ஒப்பந்தங்கள் அமைந்தன.
அந்தவகையில் லிஸ் ட்ரஸ் பிரதமரானதைத் தொடர்ந்து வர்த்தக ரீதியில் இந்தியா – பிரிட்டன் இடையே இனிமையான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.
பெரும் சவால்களுடன் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்க்காக நம்பர்10 டவுனிங் தெரு காத்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பை லிஸ் பூர்த்தி செய்வாரா.. பொறுந்திருந்து பார்ப்போம்..!?