பெங்களூரு வெள்ளத்திற்கு யார் காரணம்? – முதல்வர் பசவராஜ் 'பளீச்!'

பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு உட்பட அருகில் உள்ள மாவட்டங்களில், இதுவரை இல்லாத அளவில், கனமழை பெய்துள்ளது. பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, நகரமே, வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் குளம் போல் மழைநீர் தேங்கி இருக்கிறது.

குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழந்துள்ளதால், பொது மக்கள் வீடுகளை வீட்டு வெளியே வர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஒட்டுமொத்த பெங்களூரு நகரில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அலுவலகங்களுக்கு செல்வோர், பேருந்துகளுக்கு பதில், டிராக்டர்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம். அவர்கள் முறையாக திட்டமிடாமல் பணிகளுக்கு அனுமதி வழங்கியதே இந்நிலைமைக்கு காரணம்.

நகரில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வடிகால் பணிகள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும்.

வெள்ளத்தில் 430 வீடுகள் முழுமையாகவும், 2,188 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளன. 225 கிலோ மீட்டர் சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, இன்று இரவு, மத்தியக் குழு கர்நாடக மாநிலத்திற்கு வருகைத் தர உள்ளது. மத்தியக் குழு ஆய்வுக்கு பிறகு, அவர்கள் ஆலோசனை நடத்தி கோரிக்கை மனு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.