திமுகவில் இணையும் ரவீந்திரநாத்..? ஓபிஎஸ் காட்டும் பயம்… ர. ரக்கள் ஷாக்..!!

அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதன்படி, அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான வங்கி கணக்கு அட்டையை வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு பெரும்பாலும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் முக்கிய வாக்குறுதிகளை திசைதிருப்பவும், பெண்களையும், இளம் வாக்காளர்களை கவருவதற்காக தந்திரம் என்றும் அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதே சமயம் ” புதுமைப்பெண் திட்டம் வரும் காலத்தில் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார். இந்நிலையில், “புதுமைப் பெண் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகள்” என அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எப்போதும் திமுகவை பஞ்சு மட்டையால் அடித்து வருகின்றனர். மத்தியிலும் அனுசரித்து செல்ல வேண்டும், சொந்த கட்சியியையும் விட்டுக்கொடுக்கக்கூடாது, எதிர்கட்சியையும் முடிந்த அளவுக்கு விமர்சிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசியல் செய்து வரும் ஓபிஎஸ் போல அவரது மகனும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்த நிலைப்பாடுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை.

அடித்தால் அடி இடித்தால் இடி என்று இருக்காமல், சேஃப் சோனில் இருந்துகொண்டு சுயநலமான அரசியல் செய்யும் ஒருவரை கட்சிக்குள் எப்படி வைத்திருக்க இயலும்? என்பதுதான் ஈபிஎஸ்-இன் ஆதங்கம். சரி, ‘புதுமைப் பெண்’ திட்டம் நல்ல திட்டம் தானே ரவீந்திரநாத் கூறியுள்ளார், இதில் என்ன முட்டுக்கொடு அரசியல் இருக்கப்போகிறது என கேள்வி எழலாம். ஆனால், அதிமுக காலத்தில் கொண்டுவர முயன்ற பல திட்டங்களுக்கு திமுக தடையாக இருந்தது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்த அதே திமுக, இப்போது அந்த திட்டத்தை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை என்று அமைச்சர் எ.வ. வேலு பேசியிருப்பதை குறித்து ரவீந்திரநாத் எதுவும் பேசாதது முட்டுக்கொடுப்பது தானே? அல்லது அதே விவசாய நிலங்களை சீரழித்து இரண்டாவது ஏர்போட் கட்ட முடிவு செய்து திமுக அரசு தீவிரம் காட்டி வருவதை குறித்து ரவீந்திரநாத் எதுவும் பேசவில்லையே என்பதுதான் ர.ரக்களின் வேதனை.

எப்படியும், இனிமேல் அதிமுகவில் பெருத்த ஆதரவுடன் பிரவேசிக்க ஓபிஎஸ்க்கு வாய்ப்பு கம்மிதான். அதற்காக, திமுகவில் இணையவும் வாய்ப்பில்லை அதே சமயம், திமுகவில் இணைய மாட்டார் என்பதையும் உறுதியாக சொல்லமுடியாது. ஏனென்றால் இது அரசியல். அதிகாரத்தை ஒருமுறை ருசித்துவிட்டால் ருசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது எங்கு கிடைக்கிறதோ கடைசியில் தஞ்சம் அடையதான் வேண்டும். அதற்கான பிள்ளையார் சுழியை ரவீந்திரநாத் விரைவில் போடுவார் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

மேலும், கோடிக்கணக்கான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாது என்பதாலையே இரண்டரை லட்ச மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தை அதுவும் இத்தனை நாட்கள் கழித்து அமல்படுத்தியுள்ளனர் என விமர்சிக்கின்றனர். இதுதாங்க திமுகவின் ராஜ தந்திரம் என்றும் புருவத்தை உயர்த்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.