தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப்.5) பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் சாயரட்சையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதுமைப் பெண் திட்டம் வரவேற்கக்கூடியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, லேப்டாப், ரூ. 25,000 திருமண உதவித்தொகை என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதே வழியில் திமுக அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கக்கூடிய திட்டம் கொண்டுவந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது” என தெரிவித்தார்.
மேலும், ஒற்றைத் தலைமை குறித்த வழக்கு தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் உச்ச நீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதை அவரே தெரிவிப்பார் என்றார்.
டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “கழகத்தில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கழக ஒருங்கிணைப்பாளர் கருத்து, அதுதான் தனது கருத்தும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil