டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி யுயுலலித் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரம் முதல் தொடர் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் படிப்பு, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து துறைகளிலும் சாதி, மத ரீதியிலான இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய பாஜக அரசு, பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு வருமான வரம்பாக எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உடையவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைத்தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது, பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், எம்.திரிவேதி, ஜே.பி பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று ஆலோசனை நடத்தியது. அப்போது தலைமை நீதிபதி, ” இந்த வழக்கு தொடர்பாக எந்த மாநிலங்கள் வேண்டுமானாலும் வாதங்களை முன் வைக்கலாம் எனவும் வாதங்களை முன் வைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் கால அளவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்காக செப்டம்பர் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையுள்ள முதல் வாரத்தில் மூன்று வேலை நாட்களும், செப். 19 முதல் செப்.23 வரை உள்ள இரண்டாவது வாரத்தில் இரண்டு வேலை நாட்களும் அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் முன்வைத்துள்ள சில சிக்கல்கள் குறித்த விவரங்களை வழக்கில் ஆஜராகும் அனைத்து மனுதாரர்களுக்கு ம் வழங்கி இது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டு அதன் விவரங்கள் வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அன்றைய தினம் வழக்கு குறித்து இறுதி நிலைப்பாடு எட்டப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.