“பிரதமராகும் ஆசை இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே நோக்கம்” என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், கடந்த 8 ஆண்டுகளாக, ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்து அதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.
அண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் ஆகியோர் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போதே களை கட்டி விட்டது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டெல்லிக்கு, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் வந்துள்ளார். நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய அவர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, டெல்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சீதாராம் யெச்சூரியை, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளராக நான் உரிமைக் கோரவும் இல்லை; ஆசைப்படவும் இல்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். அதனால் தான் நான் இங்கு வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. ஆனால் உங்களுக்கு அது தெரியாது.
நான் டெல்லிக்கு வரும்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வருவேன். இடதுசாரி கட்சிகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, “முதலில், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதே நோக்கம். பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வது அல்ல. நேரம் வரும் போது, பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து தெரியப்படுத்துவோம்,” என்றார்.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, இன்று மாலை, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளார். அடுத்த படியாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஐஎன்எல்டி தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா போன்ற எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.