லண்டன்: பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “எனது உறுதியான ஆதரவை லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசுக்கு வழங்குகிறேன். புதிய அரசின் ஒவ்வொரு படியையும் நான் ஆதரிப்பேன். எதிர்காலத்தில் பிரதமர் நாட்டை நல்ல முறையில் வழி நடத்த கன்சர்சேடிவ் கட்சியினர் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை கலைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டு முதல் பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ஆட்சிக்கு அவரது சொந்தக் கட்சியிலே எதிர்ப்பு கிளம்பியது. பிரிட்டன் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் போரிஸ் ஜான்சன் எடுத்துச் செல்லவில்லை என்ற விமர்சனங்கள் வலுவாக எழுந்தன. இதனால் அமைச்சரைவையில் போரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். அடுத்த பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஒரு மாதமாக நடந்தது.
இதில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.