ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் திறமையான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய ரி 20 லீக் மற்றும் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் ஒருவரான இவர், பல ஆண்டுகளாக சி.எஸ்.கே அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தவர். அவர் 205 ஐ.பி.எல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ஓட்டங்களை தனதாக்கியுள்ளார்.
இவர் 2020 ஆம் ஆண்டு தோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த தகவலை ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பி.சி.சி.ஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐ.பி.எல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து தப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ஓட்டங்களும், 78 ரி 20 போட்டிகளில் 1,605 ஓட்டங்களும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.