தெலுங்கில் 8 வாரங்கள், மலையாளத்தில் 6 வாரங்கள் கழித்தே ஓடிடி ரிலீஸ், தமிழில் மாற்றம் எப்போது ?

2020ம் ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் சினிமா பார்ப்பதற்காக டிவிக்களை மட்டுமே பார்த்து போரடித்துப் போன மக்களுக்கு ஓடிடி தளங்களே மாற்றத்தைக் கொடுத்தன. பார்க்காத பல மொழிப் படங்களையும், மற்றவர்கள் பாராட்டிய படங்களையும் பார்க்கத் தொடங்கினார்கள். திடீரென ஒரு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி ஓடிடி தளங்கள் நகர ஆரம்பித்தன.

தியேட்டர்களை மூடிய காரணத்தால் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியவில்லை. எனவே, ஓடிடி தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிட ஆரம்பித்தார்கள். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது தியேட்டர்களில் வெளியான படங்களை நான்கு வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். நான்கு வாரங்கள் என்பது பெரிய காத்திருப்பு இல்லை. எனவே, தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இதன் காரணமாக தெலுங்குத் திரையுலகினர் கடந்த சில மாதங்களாகவே பெரும் ஆலோசனையில் இருந்தார்கள். வேலை நிறுத்தங்களும் கடந்த மாதம் நடந்தது. முடிவாக தெலுங்கு திரையுலகினர் சேர்ந்து புதிய படங்கள் ஓடிடி தளங்களில் எட்டு வாரங்கள் கழித்தே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அதன் எதிரொலியாக மலையாளத் திரையுலகத்திலும் பேச்சு வார்த்தை நடந்தது. அங்கு ஆறு வார இடைவெளி என முடிவெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் தமிழில் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இங்குள்ள இரண்டு முக்கிய தயாரிப்பு சங்கங்களுக்கு இடையேயும் திரையுலகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இன்னும் எந்தவிதமான முடிவையும் இது குறித்து எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.