`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ரிது வர்மா, இப்போது சர்வானந்த் ஜோடியாக `கணம்’ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து விக்ரம், கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவான ‘துருவ நட்சத்திரம்’, அசோக் செல்வனுடன் ‘நித்தம் ஒரு வானம்’ என வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ரிதுவர்மாவிடம் பேசினேன்.
இன்ஜினியரிங் முடிச்சிட்டு நடிக்க வந்திருக்கீங்க..?
“நிஜம்தான். என் குடும்பத்துல உள்ள எல்லாருமே நிறைய படிச்சிருக்காங்க. ஹைதராபாத்துல ஸ்கூல் நடத்துறோம். அம்மா ஸ்கூல் தாளாளர். அப்பா வங்கி அதிகாரியாக இருந்தவர். சொந்த பந்தங்களில் பலர் டாக்டர்கள், வக்கீல்களா இருக்காங்க. அதனால நானும் நல்லா படிச்சேன். காலேஜ் முடிச்சதும், குறும்படத்துல நடிச்சேன். அதுக்கு கான் திரைப்பட விழாவுல சிறந்த குறும்படத்துக்கான விருது கிடைச்சது. அப்புறம், சினிமா சான்ஸ் கிடைச்சது நடிக்க வந்துட்டேன். ‘பெல்லி சூப்புலு’ ஹிட்டுக்குப் பின் தென்னிந்திய படங்கள்ல கமிட்டாக ஆரம்பிச்சிட்டேன்.”
‘கணம்’ல எப்படி வந்தீங்க?
“ஶ்ரீகார்த்திக் இந்தக் கதையை சொன்னதும், இது டைம் டிராவல், சயின்ஸ் ஃபிக்ஷன், இதுல நிச்சயம் இருக்கணும்னு விரும்பினேன். தெலுங்கோ, தமிழோ ஒரு நல்ல படத்துல நானும் இருக்கணும்னு விரும்பினேன். அப்படித்தான் படங்களை செலகட் பண்றேன். அதேபோல ஒரு படத்துல எவ்ளோ நேரம் வந்துட்டுப் போறேன் என்பது முக்கியமல்ல. ஒரு நல்ல கதையில நாம இருக்கோம். நம்ம பங்களிப்பு இருக்கு என்பதே சந்தோஷமான விஷயம்தான். இதுல அமலா மேடமோட நடிச்சிருக்கேன். நான் அவங்களோட ரசிகை. அவங்ககிட்ட நிறைய கத்துக்கிட்டேன். சமூக அக்கறை உள்ளவங்க அவங்க!”
விக்ரமோட ‘துருவ நட்சத்திரம்’ எப்படி வந்திட்டிருக்கு..?
“அந்தப் படத்துல நானும் இருக்கேன். விக்ரம் சார் ஜோடியா நடிக்கறேன் என்பதை இப்பவரை என்னால நம்ப முடியல. கனவு நனவானது மாதிரி இருக்கு. கௌதம் மேனன் சார் மேக்கிங், மேஜிக்கலா இருக்கு.”
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துல இருந்து துல்கர் உங்க நண்பர்ன்னு சொல்றாங்களே…
“துல்கர் அருமையான மனிதர். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால்’ படத்துக்குப் பிறகும் அந்த டீமோடவே போன்ல பேசிட்டுத்தான் இருக்கோம். துல்கரோட படங்கள் வெளியாகும் போதும் பேசுவேன். என் படங்கள் ரிலீஸ் அன்னிக்கு அவரும் வாழ்த்துவார். பிறந்தநாள் வாழ்த்துகள் ஷேர் பண்ணிக்குவோம்.”