'விரைவில் மாநில கல்விக் கொள்கை' – அமைச்சர் பொன்முடி தகவல்!

மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மகளிர் செய்வது முணுமுணுப்பு பிரசாரம். எல்லா விஷயங்களையும் பிறரிடம் பரப்புவதே மகளிரின் வேலை. நான் கூட பியுசி படிக்கும்போது டாக்டராக வேண்டுமென்று நினைத்து தான் படித்தேன். இன்று தமிழ்நாட்டில் அதிக அளவில் உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்.

பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறி இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் இன்டர் டிசிப்ளினரி படிப்புகளை கற்க வேண்டியது முக்கியம். மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பேருந்துகளின் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை திராவிடம் மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மதம், மொழி , இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் பலரையும் படிக்க வைத்து வருகின்றனர். சிறுபான்மை சமுதாயமும் முன்னேற வேண்டும் என்று நோக்கத்தை கொண்டிருப்பதே திராவிடம் மாடல் ஆட்சி.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும். 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படி பொதுத் தேர்வு கொண்டு வந்தால் இடைநிற்றல் என்பது அதிகமாக காணப்படும். 10, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் அது மட்டும் போதுமானது என்று நினைக்கிறோம். விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படும். மருத்துவம் படித்து மருத்துவர்கள் தனியே தொழில் தொடங்குவது போல பொறியாளர்களும் இதர துறை மாணவர்களும் தொழில் தொடங்கி தொழில் முனைவராக வரவேண்டும் என்பதே இந்த அரசின் எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.