வாஷிங்டன்: வடகொரியாவிடமிருந்து லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பீரங்கி குண்டுகளையும், ஏவுகணைகளையும் ரஷ்யா வாங்குகிறது என்று அமெரிக்காவிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பீரங்கி குண்டுகளையும், ஏவுகணைகளையும் வடகொரியாவிடமிருந்து ரஷ்யா வாங்கவுள்ளது. இவை அணைத்தும் கடல் வழியாக வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இம்மாதிரியான ஆயுதங்களை வடகொரியாவிடமிருந்து வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்குப் பின் வடகொரியா, ஈரான் உடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது. முன்னதாக, அணு ஆயுத சோதனை காரணமாக வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறான சூழலில், இவ்விரு நாடுகளிடமிருந்தும் ரஷ்யா ஆயுதங்களை வாங்கி வருகிறது.
ரஷ்யா தொடர்ந்து தனது நாட்டின் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடக்கும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலே அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவையும் எட்டாமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.