திருவானைக்காவல், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் கோலாகலம்

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நேற்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை உற்வசர் ஜம்புகேஸ்வர் வெள்ளி குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவானைக்காவல் வெள்ளிக்கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை அடைந்தனர்.

அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயிலில் நீலிவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. நீலிவனேஸ்வரர் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கோயிலின் வடக்கு பிரகாரத்தில் வைகை அணையை போன்று தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த இடத்தில் எழுந்தருளினார்.

அங்கு தண்ணீர் அணையை உடைத்து, மீண்டும் அதை சரி செய்வது போன்றும், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த வரலாற்றினை ஓதுவார்கள் விளக்கிக் கூறினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முசிறி சிவன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று மாலை கோயிலின் முன்புறம் மண் கொட்டி, நான்கு புறமும் கரைகட்டி, நடுவில் வாழைக்கன்றுகள் நட்டு வைத்து, சிவன், பார்வதி உற்சவர் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்து பக்தர்கள் தோளில் சுமந்து வர சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.