மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: சேலம், சென்னை 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் தொடங்கி உள்ளது. திமுக அரசு தற்போது 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து செய்யாறு அருகே கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை  திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக நிலம் கையப்படுத்தப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம், நீதிமன்ற உத்தரவு போன்றவற்றால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதில் திமுக, பாமக உள்பட பல கட்சிகள் தீவிரமாக பணியாற்றி 8 வழிச்சாலை திட்டத்தை முடக்கின.

ஆனால், கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது மீண்டும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என கூறி உள்ளது.  இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,  “எங்களைப் பொறுத்தவரை 8 வழிச்சாலை திட்டம் என்பது கொள்கை முடிவு. அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தியுள்ளோம். பல சாலைகளை நாங்கள் அமைத்துள்ளோம். வாகனங்களின் உற்பத்தி நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அப்போது என்ன செய்ய முடியும், சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும். நிலங்களை எடுக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறினார். அமைச்சர் வேலு மாற்றி பேசியது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  8 வழிச்சாலை திட்டத்தில், 47 சதவீத சாலை யானது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ளதால், போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர்.

சேத்துப்பட்டு அடுத்த ஆத்துறை, செங்கம் அடுத்த பெரும்பட்டம் ஆகிய கிராமங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி கருப்பு கொடியுடன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் தேவன் தலைமை வகித்தார். கருப்பு கொடி ஏந்தி கால்நடைகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது, 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், இத்திட்டத்தை நிறைவேற்ற மாட் டோம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.