பெங்களூரு வெள்ளம் | பாஜக அரசுக்கு எதிராக டியூபில் மிதந்து இளைஞர் காங். தலைவர் போராட்டம்

பெங்களூரு: கனமழை காரணமாக பெங்களூருவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகம்மது ஹரிஸ் நலபாட் வெள்ளம் ஓடும் சாலையில் ரப்பர் டியூபில் மிதந்து போராட்டம் நடத்தினார்.

போராட்டம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ரப்பர் டியூபில் அமர்ந்து தன்னை சமநிலைபடுத்த போராடும் நலபாட்டை, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி முன்னோக்கி இழுத்துச் செல்கின்றனர். நிலையமையை விரைவில் சீர்செய்யும் படி கோஷமிடுகின்றனர்.

நகரின் வெள்ளபாதிப்புகள் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள முகம்மது ஹாரிஸ் நலபாட், “பாஜகவின் 40 சதவீத கமிஷனால் பெங்களூரு நகரம் இன்று வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ள பாதிப்புகளை சரியான முறையில் கையாளாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் மாநில அரசைக் கண்டித்து, பெல்லாந்தூரில் பல்வேறு வகையான போராட்டம் நடந்தது.

இந்த நகரத்தை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று கூறிய பாஜக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நகரத்திற்கு எப்போது வசதிகளை செய்து தரப்போகிறது என்று பெங்களூரு மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கான பதில் பாஜகவிடம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, பெங்களூருவின் தற்போதைய வெள்ள பாதிப்புகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.