கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பவத்தில் விசாரணை தொடரும் நிலையில், தனியார்ப் பள்ளிக்கு ஆதரவாகப் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், இதை மறுக்கும் பெற்றோர் மாணவி உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகிறது.
வன்முறை
கடந்த ஜூலை 17ஆம் தேதி மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளி மேஜைகள், ஆய்வகங்கள், பள்ளி பேருந்துகள் எனப் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினார்.
விசாரணை
அதன் பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கலவரக்காரர்களைச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். அதேபோல பள்ளி மாணவி தொடர்பான வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வழக்கு
கலவம் மற்றும் போலீசாரின் விசாரணை காரணமாக இதுவரை பள்ளி வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில், பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் கருதி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விரைந்து திறக்க உத்தரவிடக் கோரி லதா கல்வி சங்கம் பொருளாளர் முருகேசன் என்பவர் சென்னை ஐகோர்டில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
பெற்றோர்
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைத் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வருவதாகவும் விரைவில் பள்ளி திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
திறக்க வேண்டும்
இதனிடையே இன்று கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்தனர். கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் இசிஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உடனடியாக திறந்து அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
கோரிக்கை
பள்ளியைப் பராமரிக்க அனுமதி வழங்கி, உடனடியாக அதே பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த மனுவை கள்ளக்குறிச்சி ஆட்சியைப் பெற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர். இரண்டு தினங்களில் பள்ளி பராமரிப்பு பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
நம்பிக்கை
கலெக்டரிடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மாணவரின் பெற்றோர் சந்திரமோகன், “பள்ளியைத் திறப்பது குறித்து இரு நாட்களில் அனுமதி வழங்குவதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும், கலவரக்காரர்கள் எரித்துச் சேதப்படுத்தப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சான்றிதழ்களும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். கலெக்டர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.