ஓசூர் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் உயிரிழந்துள்ளார் . அதனால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தண்ணீரில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பாகூர் செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தில் வெள்ள நீர் அதிக அளவு செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை ஓசூர் அருகே உள்ள நல்லூர் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பா (55) என்பவர் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அதனை எடுத்தபோது அவர் நிலை தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். மேலும் வெள்ள நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மாரியப்பாவை மீட்டு ஆபத்தான நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.
இதையடுத்து இந்த இடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவரும் நிலையிலும், மாவட்ட நிர்வாகம் மேம்பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த சாலையை தான் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், தொழிற்சாலைகளுக்கு, பள்ளிகளுக்கு மற்றும் மருத்துவமனை என அவசர தேவைகளுக்கு இந்த சாலையையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தரைப்பால வழியை பயன்படுத்தவில்லை என்றால் கர்நாடக மாநிலம் சென்று சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது என்று கூறுகின்றனர். உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்பதே இந்த பகுதியில் வாழும் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது மட்டுமில்லாமல் எப்போதெல்லாம் கர்நாடகாவில் தொடர் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இதே நிலை நீடித்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் இருப்பதை கண்டித்து ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கிய 100க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மக்கள் சென்று வர தற்காலிகமாக உரிய பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்ற மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM