திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மாங்குளம் கிராமம். இது வனத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இதனால் இந்த கிராமத்திற்குள் அடிக்கடி புலி, சிறுத்தை, யானைகள் உள்பட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக ஒரு சிறுத்தை புகுந்து ஆடுகள், கோழிகள் உள்பட வளர்ப்பு பிராணிகளை அடித்துக் கொன்று வந்தது. இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்தனர். சிலர் வீடுகளுக்கு வெளியே வலை விரித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலையில் சிறுத்தை சிக்கிய போதிலும் வலையை கிழித்து தப்பிச் சென்றுவிட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலை சிக்கனாம்குடி ஆதிவாசி காலனியை சேர்ந்த கோபாலன் என்ற விவசாயி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பதுங்கியிருந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்தது. இதில் கோபாலனின் கழுத்து, உடலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் சிறுத்தையின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயப்படாமல் அவர் தன்னிடம் இருந்த அரிவாளால் சிறுத்தையின் கழுத்தில் பலமாக வெட்டினார். இதில் சிறுத்தை அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தது. சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்று காயமடைந்த கோபாலனை மீட்டு அருகில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வனவிலங்குகளை தாக்கினாலோ, கொன்றாலோ அவர்கள் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் கோபாலன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுத்தையை கொன்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே சிறுத்தையை வெட்டிக் கொன்ற கோபாலனுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. கோபாலன் விவசாயி என்பதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் மருத்துவமனையில் அவரை சந்தித்து நிதியுதவி வழங்கினர்.
மேலும் மாங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாய சங்கம் சார்பில் கோபாலனுக்கு வீர விவசாயி பட்டமும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வனத்துறை சார்பிலும் கோபாலனுக்கு சிகிச்சைக்கான உதவி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் கோபாலன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் கூறினர்.