இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “பாரத் பயோடெக்கின் கோவிட்-19 மறுசீரமைப்பு நாசி தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்-19 வைரஸிற்கான இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி இதுவாகும்.
மற்றொரு டிவிட்டில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு பெரும் ஊக்கம்! பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசி தடுப்பூசி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த டிவிட்டில், பாரத்பயோடெக்கின் இந்த நடவடிக்கை தொற்றுநோய்க்கு எதிரான நமது கூட்டு முயற்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது எனக்கூறியுள்ளார்.
நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் பெரும்பாலான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.