டெல்லி: தலைநகர் டெல்லியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான சாலையை ராஜ பாதை என்று அழைப்பார்கள். இந்த ராஜ பாதைக்கு ‘கடமை பாதை’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக வெளியான செய்திக்கு பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ராஜ பாதையை ‘கடமை பாதை’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிகிறேன்.
பிரதமரின் புதிய அதிகாரபூர்வ இல்லத்திற்கு (புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைக்கப்படும் பிரதமரின் இல்லம்) ‘கிங்கர்தவ்யவிமுத் மடாலயம்’ என்று பெயரிடுவார்கள் என்று நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். ‘கிங்கர்தவ்யவிமுத் மடாலயம்’ என்றால், ‘குழப்பமான மடம்’ என்று ெபாருள் கூறப்படுகிறது. முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘என்ன நடக்கிறது? நமது கலாசாரத்தை மாற்றுவதை பாஜக தனது கடமையாக்கி விட்டதா? இவர்களின் செயல்களால் நமது பாரம்பரியத்தின் வரலாறு மாற்றி எழுதப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.