கொரோனாவால் இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ராமநாதபுரம்: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக பஸ், ரயில், விமானம் உள்பட அனைத்து வகை போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கை வழிகாட்டல் நெறிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. முன்பதிவு ரயில் இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தொலைதூர ரயில்கள் முதற்கட்டமாக இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்கள் என இயக்கப்பட்டன.

இந்த ரயில்களில் இரட்டிப்பாக்கிய பயணக்கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்கிறது. கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு விட்ட நிலையில், குறைந்த கட்டணத்தில் இயங்கிய பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் எவ்வித திட்டமிடலையும் இதுநாள் வரை எடுக்கவில்லை. இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், கொரோனா பேரிடர் தடுப்பு கட்டுபாடுகளின்போது நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் கடந்த இரண்டுகளாக மீண்டும் இயக்கப்படவில்லை. பயணக்கட்டணத்தை இரட்டிப்பாக்கியதால், ஒன்றரை கி.மீ தூர பயணத்திற்கு ரூ.30 பயணக்கட்டணம் என்பதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். ரயில் கட்டண இரட்டிப்பை குறைத்து சாதாரண கட்டணத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பேரிடரின் போது ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுகட்டவே பாசஞ்சர்கள் பயணக்கட்டண இரட்டிப்புடன் சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக 2023-2024 நிதி ஆண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போது தெரியவரும். குறைந்த தூர பயணத்திற்கு பயணக்கட்டணம் கூடுதலாக இருக்கலாம். தொலைதூரம், சொகுசு, பயணத்திற்கு ரயில் பயணமே சிறந்தது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.